தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து 86 கட்சிகள் நீக்கம்

புதுடெல்லி : செப்டம்பர். 14 – மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் தொடர்புடைய பிரிவுகளின்படி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், கட்சியை பதிவு செய்ததில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கட்சி நீக்கப்படும். இந்தியாவில் சுமார் 2,800 கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு, தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் பெறாமல் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. இவற்றில் சுமார் 2,100 கட்சிகள் மேற்கண்ட விதிகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, பீகார், டெல்லி உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து இந்திய தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் அந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கடந்த மே மாதம் இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதன்பிறகும் சம்பந்தப்பட்ட பல கட்சிகள், தவறுகளை சரி செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷனை நாடவில்லை. இதனால் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார், தேர்தல் கமிஷனர் அனுப் சந்திரபாண்டே ஆகியோரது தலைமையிலான இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிட்ட அந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது 86 கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் என்றும், 253 கட்சிகள் செயல்படாதவை என பதிவேட்டில் குறிப்பிடப்படும் என்றும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இந்த கட்சிகள் தேர்தல் சின்னங்கள் பெற தகுதியற்றதாக ஆக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 198 கட்சிகள் இதுதொடர்பாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. தற்போது நீக்கம் செய்யப்படும் 86 கட்சிகள் மற்றும் செயல்படாத 253 கட்சிகளையும் சேர்த்து கடந்த மே 25-ந் தேதிக்கு பிறகு இதுவரை 537 கட்சிகள் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.