தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகதமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல்

கோவை:பிப்.5- நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசியதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக தமிழக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகம் முழுவதும் இருந்து நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள், பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதியில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு எத்தகைய பணிகளை பாஜகவினர் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் முதல்கட்ட பட்டியல் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தி டெல்லியில் பாஜக தலைமை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் பி.எல்.சந்தோஷ் பேசியுள்ளார்.