தேர்தல் பிரசாரம் நாளை மறுநாளுடன் ஓய்கிறது

ஈரோடு:, பிப்ரவரி . 23 –
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (25-ந்தேதி) பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதே போல் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், துரை வைகோ ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்தனர். இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர்அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் பிரசாரம்செய்தனர். எடப்பாடி பழனிசாமி நாளை தனது 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். மேலும் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். நடிகை விந்தியாவும் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார். இன்று மாலை அவர் 3-வது நாளாக அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரமேலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். இதே போல் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமானும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரம் நாளை மறுநாள் (25-ந்தேதி) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் பிரசாரத்துக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்களுடன் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். தொகுதியில் அனைத்து கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் முற்றுகையிட்டு இறுதி கட்ட பிரசாரம் செய்து வருவதால் மோதல் ஏதும் ஏற்படாத வகையில் பல்வேறு இடங்ளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவனத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் தேர்தல் பிரிவு அதிகாரிகளும் பிரசாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் விதிமுறை மீறல்கள் இருக்கிறதா? என்று அவர்கள் கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு மேல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாலை 5 மணிக்கு மேல் கிழக்கு தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜிகளில் வெளியூர்காரர்கள் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய தயார் நிலையில் போலீசார் வைக்கப்பட்டு உள்ளனர்.