தேர்தல் முடிவு தாமதம்: முறைகேடு நடப்பதாக இம்ரான் கான் கட்சி குற்றச்சாட்டு

லாகூர்: பிப். 9:
பாகிஸ்தான் நாட்டில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் முறைகேடு நடப்பதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மொத்தமுள்ள 256 சீட்களில் 12 இடங்களுக்கான முடிவு மட்டுமே இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் இம்ரான் கான் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னிலை வகிப்பதாக தகவல். இதன் மூலம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு கடுமையான சவால் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட 12 இடங்களில் 5 இடங்களை இம்ரான் ஆதரவாளர்கள் வென்றுள்ளனர். அவர்கள் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டடிருந்தனர்.
இந்த தேர்தலில் சுமார் 12 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் மக்களின் கட்டளை திருடப்பட்டுள்ளது. இதனை உலகுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். தேர்தலையொட்டி அடக்குமுறைகள் இருந்த சூழலில் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் வாக்கினை செலுத்தி இருந்தனர். இத்தகைய சூழலில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இப்போது அதன் முடிவை அறிவிப்பதில் முறைகேடு செய்வதாக தெரிகிறது என பிடிஐ தரப்பில் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட காரணம் என தேர்தல் ஆணையத்தின் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இம்ரான் மற்றும் நவாஸ் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.