தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு

சென்னை: டிசம்பர். 11 – மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்றுதொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டன. தேர்வு வரும் 13-ம் தேதி தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை கடந்த மாதம் வெளியிட்டது. அதில் 11, 12-ம் வகுப்புக்கு டிசம்பர் 7-ம் தேதியும், மற்ற வகுப்புகளுக்கு டிசம்பர் 11-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.இதற்கிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 4 மாவட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.இதையடுத்து, டிசம்பர் 7-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் இன்று (டிசம்பர் 11) தொடங்கி நடக்க இருந்தன. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால், மாணவர்கள் நலன் கருதி அரையாண்டு தேர்வு தேதியை 2-வது முறையாக மீண்டும் மாற்றம் செய்துமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.