தேவகவுடாவுக்கு தெரிந்தே வெளிநாடு தப்பிய பிரஜ்வல்

பெங்களூரு: மே. 25
முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா ஆகியோருக்கு தெரியாமல் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்க முடியுமா? அவரது குடும்பமே திட்டமிட்டுதான் பிரஜ்வல் தப்பி செல்ல உதவியுள்ளனர் என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வெளியானது. இதையடுத்து, அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவர் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் கர்நாடக அரசும் போலீஸாரும் அலட்சியமாக செயல்படவில்லை. அவரை கைது செய்ய அரசு எல்லா வகையிலும் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா தூதரக பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிக்க உதவியது யார்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏன்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
பிரஜ்வல் தன் தந்தை ரேவண்ணாவுக்கும், தாத்தா தேவகவுடாவுக்கும், சித்தப்பா குமாரசாமிக்கும் தெரியாமல் எப்படி வெளிநாட்டுக்கு தப்பியோடியிருப்பார்? இந்த குடும்பத்துக்கு அவர் எங்கிருக்கிறார் என உண்மையிலேயே தெரியாதா? பாஜகவின் கூட்டணியில் மஜத இருப்பதால் மத்திய அரசு பிரஜ்வல் விவகாரத்தில் அலட்சியமாக செயல்படுவதை கர்நாடக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் கோபத்தை சமாளிப்பதற்காக தேவகவுடாவும் குமாரசாமியும் நாடகம் ஆடுகின்றனர்’’ என விமர்சித்தார்.
தேவகவுடா பதில்: இதற்கு தேவகவுடா, ‘‘இந்த விவகாரத்தில் எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரஜ்வல் எனக்கும் என் குடும்பத்தினருக்கும், மஜதவினருக்கும் மிகுந்த வேதனையைக் கொடுத்துவிட்டார். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் என்னை அவமானப்படுத்துகின்றனர். நான் ஒருபோதும் அவரை பாதுகாக்க மாட்டேன்.
பிரஜ்வல் வெளிநாட்டுக்கு போனது பற்றி எனக்கு தெரியாது. இந்த வழக்கை வைத்து நடக்கும் அரசியலை கடவுளே பார்த்துக் கொள்வார். பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும். போலீஸார் முன்பாக பிரஜ்வல் சரணடைந்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’’ என்றார்.