தேவகவுடா பெயரை குமாரசாமி கெடுக்கிறார் – டி.கே.சிவகுமார்

பெங்களூரு, நவ. 15:அண்மைக்காலமாக குமாரசாமி தேவகவுடாவின் நன்மதிப்பை சீரழித்து வருகிறார். என்டிஏ கூட்டணியில் மஜத சேர்ந்ததன் மூலம் தேவகவுடா தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்த நன்மதிப்புகளை, கொள்கைகளை குமாரசாமி சீர‌ழித்து விட்டார் என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘தேவகவுடாவுக்கு வேறு வழியே இல்லை என்பது போல குமாரசாமி, கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதற்காக‌ குமாரசாமி மீது பரிதாபப்படுகிறேன். என்டிஏ கூட்டணியுடன் கைகோர்த்துள்ள, குமாரசாமி நலம் இருக்கட்டும்.
காங்கிரஸ் அரசின் உத்தரவாதத் திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை என்று குமாரசாமி குற்றம் சாட்டுகிறார். இதைப் பற்றி விவாதிக்க குமாரசாமி தயாராக இருக்கிறாரா. குமாரசாமிக்கு காங்கிரஸ் அரசின் மீது பொறாமை. அவரின் பொறாமைக்கு மருந்து இல்லை. தனக்கு ஆட்சி அமைக்க‌ வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற பொறாமையில் அவர் பேசி வருகிறார்.
சக்தி யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்பிலான பேருந்து பயணங்களில் மாநில பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். க்ருஹக்ஷ்மி திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைகின்றனர். ராமநகரம், மாகடி, கனகபுரா, சென்னப்பட்டினா மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் பெண்களும் உத்தரவாத திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். உத்திரவாதத் திட்டங்கள் தோல்வியடைந்ததா அல்லது அவர்கள் கட்சிக்காரர்களின் சொந்தப் பணம் போய்க்கொண்டிருக்கிறதா என்பது பற்றிய தகவல்களைத் தங்கள் கட்சிக்காரர்களிடம் குமாரசாமி கேட்க வேண்டும் என்றார்.