தைப்பூசம் – லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: ஜனவரி : 25 – திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஜன. 19ம் தேதி கொடியேற்றத்துடன் தைபூசத் திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றிரவு 7.30 மணிக்கு நடந்தது. சிம்ம லக்னத்தில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு சுவாமி வீதிஉலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 லட்சம் பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதேபோல், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைபூச விழாவையொட்டி, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சுவாமி அலைவாயு கந்தபெருமான் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோயில் சேர்கிறார். தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் பாதயாத்திரையாக குவிந்த வண்ணம் உள்ளனர். வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 153வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.