தொகுதி பங்கீடு இழுபறி: முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: மார்ச் 8: முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கிய கட்சி திமுக. இந்த முறை கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால், அதற்கு பதில் கமல்ஹாசனின் மநீமவை சேர்க்க முடிவெடுத்துள்ளது. மேலும், 23 இடங்களில் திமுக போட்டியிடவும், 17 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவெடுத்தது.
அதேபோல், போட்டியிடும் தொகுதிகளில் சிலவற்றை மாற்றி பெற்றுக் கொள்ளவும் தீர்மானித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டது.
அடுத்த கட்டமாக, காங்கிரஸ் கட்சிக்கு 6 மற்றும் புதுச்சேரி, விசிகவுக்கு 2, மதிமுகவுக்கு 1 தொகுதிகளை ஒதுக்கும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சி தனக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் ஒன்றை மநீம கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. ஆனால், இதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
இது தவிர, விசிக தனக்கு கூடுதலாக ஒரு பொது தொகுதியை வழங்குவதுடன், மூன்றிலும் தங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றது. இதனால் கூட்டணி இறுதியாவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி இழுபறி இருந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது. கூட்டணி இழுபறிக்கு மத்தியில் முதல்வரை சந்தித்து திருமாவளவன் ஆலோசித்து வருகிறார்.