தொகுதி பங்கீட்டில் உடன்பாடு

சென்னை: பிப்ரவரி 29-“தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் எல்லாம் நல்லபடியாக நடக்கும். எங்களுக்கு திருப்தி ஏற்படுகிற அளவில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஆகியிருக்கிறது.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொண்டது. பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.சுப்பராயன், “தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பில்லை என்பதை நிரூபிப்பதற்கான தேர்தல்தான் 2024 நாடாளுமன்ற தேர்தல். தேர்தலில் வெல்ல பாஜக சகல அஸ்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது. இவற்றுக்கு தீர்வளிப்பதற்கு சாரதியாக நின்றுகொண்டிருக்கிறது திமுக. அதன் தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 தேர்தலில் பாஜக கூட்டணியை வேரறுக்கும். அதில் உறுதியான நம்பிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
தொகுதி பங்கீடு குறித்து மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் எல்லாம் நல்லபடியாக நடக்கும். எங்களுக்கு திருப்தி ஏற்படுகிற அளவில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஆகியிருக்கிறது. மன ரீதியாக ஒப்புதல் கொடுக்க இசைவு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் அனைத்தும் தெரியப்படுத்தப்படும். இப்போது தொகுதிகளை அறிவிக்கின்ற நிலையை பேச்சுவார்த்தை அடையவில்லை. எனினும் சிட்டிங் தொகுதிகளுக்கு விருப்பம் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.” என்று தெரிவித்தார்.