தொடரும் கொரோனா பாதிப்பு இன்றும் 41 ஆயிரம் பேருக்கு

புதுடெல்லி, ஜூலை 22- கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 383 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 720 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 507 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 38,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 04 லட்சத்து 29 ஆயிரத்து 339 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.35 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,09,394 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41,78,51,151 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.