தொடரும் தமிழக பதக்க வேட்டை

சென்னை: ஜன.23-
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் நேற்று சென்னை மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் 500 மீட்டர் டைம் டிரையல் பிரிவில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டாபிடாரத்தைச் சேர்ந்த ஜே. ஸ்ரீமதி (0:39.702) தங்கப்பதக்கம் வென்றார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜி. விம்லா மச்ரா (0:40.211) வெள்ளிப் பதக்கமும், தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஆர். தமிழரசி (0:41.028) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிருக்கான அணிகள் ஸ்பிரின்ட் பிரிவில் தன்யதா, ஸ்ரீமதி, தமிழரசி, சுவேதா ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி பந்தய தூரத்தை 1:20.036 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றது. ராஜஸ்தான் (1:20.528) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிரா (1:20.814) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.
ஆடவருக்கான அணிகள் ஸ்பிரின்ட் பிரிவில் என்.கிஷோர், எஸ்.புருசோத்தமன், ஜே.மைக்கேல் அந்தோனி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி பந்தய தூரத்தை 1:11.156 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றது. கேரளா அணி (1:09.856)தங்கப் பதக்கமும், மகாராஷ்டிரா (வெள்ளிப் பதக்கமும்) வென்றன.
ஆடவருக்கான ஆர்ட்டிஸ்க் தனிநபர் பிரிவில் மகாராஷ்டிராவின் ரோகன் சுனில்தயாதே (135.13) தங்கப் பதக்கம் வென்றார்.
தமிழகத்தின் எஸ்.சித்தேஷ் (133.75) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிராவின் ஸ்வராஜ் சன்னி பிஸ்கே (132.38) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான கபடி இறுதிப் போட்டியில் ஹரியானா – ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ஹரியானா 43-28 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. 2வது இடம் பிடித்த ராஜஸ்தான் வெள்ளிப் பதக்கம் பெற்றது.
அரை இறுதியில் தோல்வியடைந்த தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் வெண்கலப் பதக்கம் கைப்பற்றின.
மகளிருக்கான கபடி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் மோதின. இதில் ஹரியாணா 40-33 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. 2வது இடம் பிடித்த தமிழ்நாடு மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.