தொடரும் மக்கள் போராட்டம்

சென்னை: டிச.8- மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். இம்மழையால் மாநகரில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதில் நேற்றைய நிலவரப்படி 384 இடங்கள் மற்றும் 6 சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் வடியவில்லை. நீரை வெளியேற்ற 1,068 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதித்த பகுதியில் 73 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் 12 ஆயிரத்து 355 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், வெள்ளம்பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும்இதுவரை 33.64 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.சென்னையை மீட்கும் பணியில் ஏற்கெனவே 23 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் 267 இடங்களில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். பொதுமக்களை மீட்கும் பணியில் 240 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் பால் பாக்கெட், 6 ஆயிரம் பால் பவுடர், 32 ஆயிரம் ரொட்டி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழைநீர் தேங்கிய 450-க்கும் மேற்பட்ட இடங்களில் வட சென்னையில் மட்டும் 97 இடங்கள் உள்ளன.
இவற்றில் ஒன்றில்கூட முழுமையாக வெள்ளநீர் வடியவில்லை.
அதனால்கடந்த 4 நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீர்கலந்த நீரை வெளியேற்ற வலியுறுத்தியும், இதுவரை மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்தும் வட சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கொடுங்கையூர் அபிராமி அவென்யூ பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மாநகராட்சி குப்பை லாரிகளைமறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் கண்ணதாசன் நகர்பேருந்து நிலையம் அருகில் சேலவாயல் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.