தொடரும் மழை ஆர்ப்பாட்டம் 2 பேர் சாவு

பெங்களூர் : ஜூன். 18 – மாநில தலைநகர் பெங்களூரில் மழையின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வரும் நிலையில் வீடுகள் இடிந்து விழுவதும் , சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பது போன்ற மழையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்ததில் இந்த பாதிப்புகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. சிவமொக்காவை சேர்ந்த மிதுன் (24) மற்றும் ஹாவேரி நகரின் முனியம்மா (55)  ஆகியோர் இறந்துள்ளனர் என மாநகராட்சி மூலங்கள் தெரிவிக்கின்றன . வெள்ளிக்கிழமை நள்ளிரவு  நகரின் கே ஆர் புரம் பகுதியில் மழையின் ஆர்பாட்டம் அதிகரித்து காவேரி நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முனியம்மா என்பவர் இறந்துள்ளார்.

இதே வேளையில் வீட்டுக்குள் இருந்த மேலும் இருவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு இறந்தவர் உடல் வைதேஹி  மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது . சம்பவ இடத்திற்கு மஹாதேவபுரா வட்டார மாநகராட்சி இணை ஆணையர் வெங்கடாசலபதி நேரில் சேர்ந்து பார்வையிட்டு பரிசீலனை செய்துள்ளார். இதே வேளையில் நகரின் காயத்ரி லே அவுட்டில் மழையால் அடித்து செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளை பிடிக்க சென்று மிதுன் என்பவர் காணாமல் போயுள்ளார். அவர் மழை நீரில் மூழ்கி  இறந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது . நேற்று இரவு 11 மணியளவில் பெய்த பெரும் மழையால் கால்வாயுடன் ஒட்டியிருந்த காம்பௌண்ட் சுவர் இடிந்து விழுந்து அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் முழுதுமாக சேதமடைந்துள்ளன. அப்போது கால்வாய் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தை மூன்று பேர் இழுத்து பிடிக்க முயன்றுள்ளனர். இந்த சமயத்தில் மிதுன் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். மிதுன் மழைநீரில் அடித்து செல்வதை பார்த்த இரண்டு பேர் கூச்சலிட்டுள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் மாநகராட்சிக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த உடனேயே அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் அவசர சேவை பிரிவினர் மற்றும் என் டி ஆர் எப் பிரிவினர் அடித்து செல்லப்பட்ட மிதுனை தேடி வருகின்றனர். சீகேஹள்ளி ஏரிக்கு இந்த கால்வாய் இணைந்திருப்பதால் மழையால் ஏறி நிரம்பி சாலையில் பொங்கி வழிந்ததுடன் இதன் விளைவால் கால்வாய் அருகில் இருந்த வீட்டின் காம்பௌண்ட் சுவர் இடிந்து விழுந்துள்ளது.