தொடரும் ஹிஜாப் பதட்டம்

மங்களூர்: மே. 30 – மங்களூர் பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் விவகாரம் தணிவதற்கான அறிகுறிகள் தெரியவரவில்லை. 12 பேர் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுவே மாணவர்களின் போராட்டத்திற்கு காரணமானது. பள்ளி கல்லூரிகளில் மாணவியர் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என உயர்நீதிமன்றம் உறுதியான உத்தரவை பிறப்பித்திருப்பினும் அதை மாணவியர் காற்றில் பறக்க விட்டு அடிக்கடி இப்படி விவகாரங்களுக்கு இடம் அளிக்கிறார்கள். நேற்று முன் தினமும் மாணவியர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர் . இதனால் ஆத்திரமடைந்த ஹிந்து மாணவர்கள் தங்களுக்கும் காவி சால்வை அணிந்து வகுப்புகளுக்கு வர அனுமதிக்க வேண்டும் என பிடிவாதம் செய்துள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை சமாதானப்படுத்தி ஹிஜாப் அணிவதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு சீருடையை கட்டாயப்படுத்தி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு உயர்த்திப்பிடித்ததுடன் ஹிஜாப் அணிய வாய்ப்பளிக்க மறுத்து விட்டது. ஆனாலும் மங்களூர் பல்கலைக்கழகத்தில் இன்றும் ஹிஜாப் விவகாரம் தொடர்ந்துள்ளது. மங்களூர் பல்கலைக்கழகம் சீருடையை கட்டாயமாகியுள்ளது. ஆனாலும் சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. கல்லூரியின் முதல்வரான டாக்டர் அனுசுயா ராய் மாவட்ட அதிகாரியை சந்தித்து விவாதிக்க முற்பட்டுள்ளார். ஒரு முறை ஹிஜாப் அணிந்து வந்த பின்னர் மாணவிகள் ஓய்வு அறைக்கு சென்று ஹிஜாபை எடுத்துவிட்டு வகுப்புகளுக்கும் வரவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வரை சந்திக்க மாணவிகள் முயன்றுள்ளனர். ஆனால் அதே வேளையில் மாவட்ட அதிகாரியை சந்திக்கவும் மாணவியர் முயன்றுள்ளனர். ஹிஜாப் குறித்து மாணவியர் இதற்க்கு முன்னரும் மாவட்ட அதிகாரியை சந்தித்த போது திங்கட்கிழமை இது குறித்து முடிவு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாவட்ட அதிகாரி எடுக்கும் முடிவை மாணவிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உயர்நீதி மன்ற தீர்ப்பை கேள்வி எழுப்பி சிலர் உச்ச நீதிமன்றம் படிகளை ஏறி இருப்பதுடன் இந்த மனு மீது விசாரணை இன்னும் துவங்க வில்லை. ஆனால் மாநில உயர்நீதிமன்றம் ஹிஜாப் குறித்து தீர்ப்பை அறிவித்திருந்தும் இன்னும் இந்த விவகாரம் முடிந்த பாடில்லை.