தொடர்ந்து மோசமாகும் காற்று

புதுடெல்லி:நவ.6-
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக உள்ளது. இன்று (நவம்பர் 6) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 488 ஆக உள்ளது. சஃபார் கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆகமோசமடைந்தது. இந்நிலையில் இன்று காலை இது 488 ஆக மிகவும் மோசமடைந்துள்ளது.
இதனால் டெல்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்கு டெல்லியில் அன்றாடம் காற்று மாசு மக்களை மூச்சுத் திணற வைக்கிறது. இதற்கிடையில் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று (திங்கள்கிழமை) சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை ஆலோசனைக்கு அழைத்துள்ளார்.
அமல்: இந்நிலையில் காற்று மாசை எதிர்கொள்ள டெல்லியில் கிராப்-4 கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் ப்ளான் அமலுக்கு வந்துள்ளது.கிராப்-4 அமலாகியுள்ளதால் டெல்லிக்குள் நுழைய சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட மிகமிக அத்தியாவசியமான பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிதமான லகு ரக வாகனங்கள் தொடங்கி கன ரக வாகன்ங்கள் வரை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை நவ.10-ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசின் நச்சுக்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும்வகையில் கிராப்-4ன் கீழ் பள்ளிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் வேதனை: தொடரும் காற்று மாசு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “எந்த ஒரு ஆரோக்கியமான நபருக்கும் காற்றின் தரக் குறையீடு 50 என்றளவில் இருந்தால்தான் சுவாசிப்பது எளிது. ஆனால் டெல்லியில் தொடர்ந்து 400-க்கு மேல் காற்றின் தரக் குறியீடு மிகமிக மோசமாக உள்ளது. இதனால் ஆரோக்கியமான நபர்களுக்கும்கூட சுவாசப் பாதை பிரச்சினைகள் ஏற்படும். ஏற்கெனவே சுவாசப் பாதை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அது உச்சபட்சமாக நுரையீரல் புற்றுநோய்வரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது” என்று கவலை தெரிவித்தனர்.
உதவிக்கரம் நீட்டும் ஐஐடி கான்பூர்: இந்நிலையில் தற்போதைய மோசமான காற்று மாசுபாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண உதவத் தயாராக இருக்கிறது கான்பூர் ஐஐடி. கிளவுட் சீடிங் முறையில் செயற்க மழையை உருவாக்கி அதன் மூலம் காற்றில் உள்ள நச்சுத் துகள்களை கரையச் செய்யலாம் என ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.இதற்குச் சாதகமான மேகக் கூட்டம் இருக்கும்போது இதனை செயல்படுத்தலாம் என்று ஐஐடி நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கடந்த ஜூலையில் பரிச்சார்த்த முறையில் இதனை கான்பூர் ஐஐடி செய்து பார்த்துள்ள நிலையில், இதனைத் தற்போது செயல்படுத்து ஐஐடி கான்பூர் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மாநில அரசு எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த நகர்வு இருக்கும்.