தொடர் சர்ச்சைகளில் டைரக்டர் ஷங்கர்


பல வெற்றி படங்கள் கொடுத்து பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்த ஷங்கருக்கு சமீப காலமாக சிக்கல்கள் தொடர்கின்றன.
தமிழில் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 என்று பல வெற்றி படங்கள் கொடுத்து பிரமாண்ட இயக்குனர் என்ற பெயர் எடுத்த ஷங்கருக்கு சமீப காலமாக சிக்கல்கள் தொடர்கின்றன. 2.0 படம் 2018-ல் வெளியான பிறகு இதுவரை அவர் இயக்கத்தில் படங்கள் வரவில்லை. கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இரு வருடங்களுக்கு முன்பே தொடங்கியும் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் இன்னும் முடியாமல் முடங்கி கிடக்கிறது. கமல் இன்னொரு படத்தில் நடிக்க போய்விட்டதால் இந்தியன் 2 படவேலைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரான நிலையில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்கக்கூடாது என்று பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.
இப்போது இந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்ததற்கும் எதிர்ப்பு கிளம்பி நோட்டீஸ் வந்துள்ளது. இந்த விவகாரமும் கோர்ட்டுக்கு செல்லும் என்று தெரிகிறது. ஏற்கனவே வடிவேலுவை வைத்து தயாரித்த இம்சை அரசன் 24-ம் புலிகேசி படமும் பஞ்சாயத்தில் இருக்கிறது.