
உதகை: நவம்பர். 13 – உதகை கேத்தி அருகே ஹாலன்நகர் பகுதிக்கு சாலை வசதியில்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி வர வேண்டிய நிலை நீடிக்கிறது. நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட ஹாலன்நகர் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள், மலைக் காய்கறி தோட்டங்களுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும், கூலி வேலைக்கும் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்துக்கு நடைபாதையோ, சாலை வசதியோ இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மலை ரயில் பாதை வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் நடந்து எல்லநள்ளி பகுதிக்கு வந்து நகர்ப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். வனவிலங்குகள் அச்சத்துக்கு மத்தியில் நாள்தோறும் மாணவர்களும், முதியோரும் நடந்து செல்கின்றனர். உடல் நிலை பாதிப்பால் அவதிப்படுவோரை தொட்டில் கட்டி தூக்கி வர கூடிய அவல நிலை இன்றுவரை நீடிக்கிறது.
சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்தில் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதித்த வயதான பெண்ணை சேரில் உட்கார வைத்து, ஆக்சிஜன் சிலிண்டருடன் தூக்கிச் சென்றோம். எனவே இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.