தொட்டில் முதல் கல்லறை வரை’ இலவசங்கள் – வருண்காந்தி விமர்சனம்

புதுடெல்லி,பிப். 23-
பாஜக எம்.பி. வருண்காந்தி, பல்வேறு பிரச்சினைகளில் பாஜக நிலைப்பாட்டுக்கு மாற்றாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்களை அவமதிப்பது போன்றது. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அல்லது பகுதி அளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன. இலவசங்கள் அளிப்பதன் மூலம் மக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். தற்போது, எல்லா அரசியல் கட்சிகளுமே இலவசம் அளிக்கின்றன. அதன் மூலம் இலவசங்கள் பெறுவது உரிமை என்ற மனநிலை ஊக்குவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து அளித்து, ‘தொட்டில் முதல் கல்லறை வரை’ இலவசங்கள் அளிக்கும் மாநிலத்தை உருவாக்குகின்றன. அதே சமயத்தில், எல்லா திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இலவசமாக கருத முடியாது. உதாரணமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை அப்படி சொல்ல முடியாது. அது, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இலவசங்களை அளிப்பதற்கான நிதி ஆதாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.