தொப்பூர் கணவாயில் மீன்பார கண்டயனர் லாரி கவிழ்ந்து விபத்து


தர்மபுரி,ஜன.13,
ஆந்திரா மாநிலத்தில் கேரளா மாநிலத்திற்கு மீன் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கண்டயனர் லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்து கொண்டிருந்தது. லாரியை ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார்(35) ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கிளீனர் விஜய்சேகர்(40) உடன் வந்தார்.அப்போது தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் முதல் வளைவை கடந்த மீன் பார கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி ஆஞ்சநேயர் கோவில் எதிரே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கசாவடி பணியாளர்கள் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கி தவித்த டிரைவர் ரமேஷ்குமார் மற்றும் கிளீனர் விஜய்சேகர் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடந்த மீன் பார கண்டெய்னர் லாரியை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.