தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புதடுப்பு நடவடிக்கை தீவிரம்

சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், இந்த தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தியாவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
ஓமிக்ரான் BA.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு ‘ஜேஎன் 1’ எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் 656 பேர் புதியதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 3,742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஒருவர் பலியாகியுள்ளார். எனவே மொத்த பலி எண்ணிக்கை 5,33,333 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், இதற்காக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதே நேரம் மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதையும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.