தொழிலாளர்களை உயிருடன் மீட்க தொடரும் மீட்பு பணி

டேராடூன்: நவம்பர் 25 – உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பதற்கான இறுதிக் கட்ட பணி தீவிரமடைந்துள்ளது. இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு இரும்பு குழாய்களை பொருத்தினால் தொழிலாளர்களை பத்திரமாக மீட்க முடியும் என்று தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை சுரங்கத்தில் மண் சரிவுஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கப் பாதையை மூடியிருக்கிறது. உட்பகுதியில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மத்திய, மாநில அரசுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட சுமார் 19 அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயற்சிமேற்கொள்ளப்பட்டது. ஆனால் மேற்பகுதியில் இருந்து தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பிறகு டெல்லி, குஜராத், ஒடிசா, உத்தர பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ராட்சத துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிடப்பட்டது.கடினமான பாறைகளை துளையிட முடியாமல் பல்வேறு இயந்திரங்கள் பழுதான நிலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்பு ஆகர் இயந்திரம் மணல் குவியலின் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட்டு முன்னேறியது. எனினும் இந்த இயந்திரம் அடிக்கடி பழுதாகி மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து 7 நிபுணர்கள் ஹெலிகாப்டரில் வரவழைக்கப்பட்டு அமெரிக்க இயந்திரம் பழுது பார்க்கப்பட்டது. அந்த நிபுணர்கள் அங்கேயே முகாமிட்டு இயந்திரம் பழுதாகாமல் பராமரித்து வருகின்றனர்.இதுகுறித்து அமெரிக்க இயந்திரத்தை இயக்கும் பிரவீண் குமார் யாதவ் நேற்று கூறியதாவது: சுமார் 47 மீட்டர் தொலைவுக்கு மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களைவெற்றிகரமாக பொருத்தி உள்ளோம். கடந்த வியாழக்கிழமை இயந்திரத்தின் அதிர்வு அதிகமாக இருந்தது.இதன்காரணமாக இயந்திரம் நிறுவப்பட்டிருந்த அடிப்பகுதி நிலைதாங்கி உடைந்தது. இதை சீர் செய்வதற்காக துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை துளையிட்டபோது இரும்பு குழாய்குறுக்கிட்டது. இதில் ஆகர் இயந்திரத்தின் முனை சேதமடைந்து துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது இயந்திரத்தை பழுது பார்த்து மீண்டும் துளையிட்டு வருகிறோம். இன்னும் 14 மீட்டர் தொலைவுக்கு துளையிட்டு குழாய்களை செலுத்தினால் தொழிலாளர்களை சென்றடைய முடியும். இவ்வாறு பிரவீண் குமார் தெரிவித்தார்.