தொழிலாளி சடலமாக மீட்பு

சென்னை: டிச.8- சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் கன்டெய்னருடன் பொறியாளர் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் என இருவர் புதைந்த நிலையில் நரேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரின் நிலை தெரியாது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை – வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான வேலைக்காக தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 50 அடி ஆழத்துக்கும் மேல் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் தங்கி பணி செய்வதற்கு வசதியாக, அருகே கேரவன் போன்ற கன்டெய்னர் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.கடந்த 3-ம் தேதி முதலே சென்னையில் பலத்த புயல் காற்றுடன், கனமழை கொட்டிய நிலையில், 4-ம் தேதி அதிகாலை கட்டுமான நிறுவனம் தோண்டியிருந்த ராட்சத பள்ளத்தின் பக்கவாட்டில் மழை நீரால் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், அருகே இருந்த பெட்ரோல் பங்க்கின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, தொழிலாளர்கள் தங்கும் கன்டெய்னர் வாகனம் ஆகியவையும் அந்த பள்ளத்தில் சரிந்து மூழ்கின. இதில், மழை பாதிப்புகளை பார்வையிட வந்த கட்டுமான நிறுவனத்தின் பணிதள பொறியாளரான (‘சைட் இன்ஜினீயர்’) வேளச்சேரி ஜெயசீலன் (29), பெட்ரோல் பங்க்கின் ஜெனரேட்டர் அறையில் இருந்த ஊழியரான வேளச்சேரி விஜயநகரை சேர்ந்த நரேஷ் (24) உட்பட அப்பகுதியில் இருந்த 5 ஊழியர்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்தனர்.கிண்டி பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர், கட்டுமான நிறுவனம் தோண்டி வைத்த ராட்சத பள்ளத்தில் வேகமாக பாய்ந்தது. இதனால் திடீரென மண் சரிவு ஏற்பட்டதாலேயே கன்டெய்னர், பெட்ரோல் பங்க்கின் முன்பகுதி ஆகியவை உள்ளே விழுந்து நீருக்கடியில் புதைந்தன என்று தீயணைப்பு துறையினர் கூறுகின்றனர்.உள்ளே சிக்கிய இருவரையும் மீட்கும் பணியில் சென்னை போலீஸார், தீயணைப்பு படையினர், மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித் துறையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.ஆனால், மீட்பு பணியில் சுணக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ‘‘விபத்து நடந்த இடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், அதிகாரிகளும் நேரில் வந்துஆய்வு செய்தும் மீட்பு பணி துரிதப்படுத்தப்படவில்லை’’ என்று கூறி, மறியலிலும் ஈடுபட்டனர்.