தொழில்நுட்பம் மூலம் ஊழல் ஒழிப்பு

பெங்களூரு, நவ.16- தொழில்நுட்பத்தால் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று அரண்மனை மைதானத்தில் நடந்தது. இந்த மாநாட்டை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார் அப்போது தொழில்நுட்பம் மூலம் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொழில்நுட்பம் மூலம் ஏற்கனவே இந்தியாவில் லஞ்சம் ஊழல் முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். மாநாட்டின் ம தொடக்க விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பம் என்பது அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்திற்கான ஒரு கருவி என்று கூறினார். தொழில்நுட்பத்தால் ஊழலை குறைக்க முடியும் என்றார்.
கோவிட் காலத்தில் அரசின் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றியது என்றார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல திட்டங்களை மக்கள் வீட்டு வாசலில் கொண்டு சேர்க்க அரசு செயல்பட்டு வருகிறது.
ஸ்வாமித்யா யோஜனா திட்டத்தின் கீழ் ஆளில்லா விமானம் மூலம் நிலம் சர்வே நடத்தப்பட்டு மக்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டன என்றார்.
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது. உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் மையமாக இந்தியா உள்ளது என்றார்.
இந்தியாவின் புத்தாக்க மண்டலத்தில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு தொழில்நுட்பத்தின் தாயகம், நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் இந்தியாவில் உள்ளன.
இந்தியா முதலீட்டுக்கு மிகவும் விருப்பமான நாடு, கர்நாடகாவும் உலகளவில் அதிக மூலதனத்தை ஈர்த்துள்ளது. தொழில்துறை நட்புக் கொள்கைகள் மூலதன முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்துள்ளன. இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியால் இன்று தொடங்கப்பட்ட பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது, இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், 350க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள், 5000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 550க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று புதிய தொழில்நுட்பத் தளங்களைக் காட்சிப்படுத்துவார்கள்.
செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, செமிகண்டக்டர், மெஷின் 5ஜி, ரோபோடிக்ஸ், பின்டெக், மெடிடெக், ஸ்பேஸ்டெக், ஜீன் எடிட்டிங், உயிரி எரிபொருள் நிலைத்தன்மை, மின் போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஐடி-பிடி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர். சி.என்.அஸ்வத்த நாராயண், தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி, மாநில அரசின் தலைமைச் செயலர் வந்திதா சர்மா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஒமர் பின் சுல்தான் அல் ஓலாமா, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் டிம் வாட்ஸ், புனேலாந்து அறிவியல் அமைச்சர் பெட்ரி ஹான்கோனன் மற்றும் ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.