தொழில் அதிபர் வீட்டில் ரூ. 7 கோடி பறிமுதல்

கொல்கத்தா,செப்.10ஸ்மார்ட் போன்களில் உள்ள ஒரு விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக கொல்கத்தாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை இயக்குனரகம் கொல்கத்தாவில் 6 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சுமார் ரூ.7 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியை கொண்டு ஏமாற்றியதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட அமீர் கான் மற்றும் பலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி எம் எல் ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள தொழிலதிபர் அமீர் கானின் வளாகத்தில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு இன்று சோதனை நடத்தி ரூ. 7 கோடி ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியது. சோதனையின்போது ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் படுக்கை அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கட்டுக்கட்டாக இருந்த அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இன்னும் தொடர்கிறது. தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு, பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணும் பணி நடைபெறுகிறது. தொழிலதிபரின் வீட்டை சுற்றி அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த செயலி மற்றும் அதன் ஆபரேட்டர்கள் சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக அமலாக்கத்துறை தகவல்கள் கூறியுள்ளன.