தோனியிடம் கற்றுக்கொண்டதை களத்தில் செயல்படுத்துகிறேன்: ஷிவம் துபே

மொகாலி, ஜன. 13- தோனியிடம் கற்றுக்கொண்டதை களத்தில்செயல்படுத்துகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிவம் துபே கூறினார்.ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் மொகாலியில் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 158ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 15 பந்தகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆல்ரவுண்டரான ஷிவம் துபே 40 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். பந்து வீச்சிலும் 2 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.ஆட்ட நாயகன் விருது வென்ற ஷிவம் துபே கூறியதாவது: நான் பேட்டிங் செய்ய இறங்கிய போது, எம்.எஸ்.தோனியிடம் கற்றுக்கொண்ட ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனை களத்தில் செயல்படுத்த வேண்டும் என விரும்பினேன். தோனியிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்,ஆட்டத்தின் கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என கூறியுள்ளார். ஒரு சில ஆலோசனைகளையும் வழங்கி எனது பேட்டிங் திறனை மதிப்பிட்டுள்ளார். அவர் எனது பேட்டிங்கை மதிப்பிட்டால், நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்று நினைக்கிறேன். இதனால் எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. தோனி, ரோஹித் சர்மா ஆகிய இருவருமே என்னை பேட்டிங் வரிசையில் முன்னதாகவே களமிறங்க அனுமதித்துள்ளனர். இதற்காக கடினமாக பயிற்சிகள் எடுத்துள்ளேன். இதனால் அவர்கள் எனக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதை அறிவேன்.அதற்கு ஏற்றபடி நானும் சிறப்பாக விளையாட விரும்புகிறேன். போட்டிகளில் விளையாடாத நேரங்களிலும் நான் உடற்தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தினேன். பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட விஷயமும் திடீரென நடந்துவிடவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் பந்து வீசி உள்ளேன்.இதனாலேயே எனது பந்து வீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான திசையைகண்டறிந்து பந்துவீச முடிந்தது, சீரான வேகத்துடனும் செயல்பட முடிந்தது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தங்கள் நாட்டின் வெற்றிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதில் உள்ளது. ஆனால் அதற்கு இன்னும் அதிக நேரம் இருக்கிறது. இவ்வாறு ஷிவம் துபே கூறினார்.