நகராட்சி கூட்டத்தில் கொசு வலை போர்த்தி பங்கேற்ற கவுன்சிலர்

திருப்பூர்: ஜனவரி : 25 – திருமுருகன் பூண்டி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்றத் தலைவர் குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஆண்டவன், துணைத் தலைவர் ராஜேஸ்வரி பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 16-வது வார்டு அதிமுக நகராட்சி கவுன்சிலர் தங்கவேல், தனது உடலில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது,16-வது வார்டில் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்த் தொற்று பரவி வருவதாக அவர் புகார் தெரிவித்தார். மேலும் ராக்கியாபாளையம் – உமைஞ்செட்டிபாளையம் சாலை ஜெகநாதன் நகர் பகுதியில் உள்ள சாக்கடையை தூர்வார வேண்டும்.
கொசு மருந்து அடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் குமார் உறுதி அளித்ததால், தங்க வேல் போராட்டத்தை கைவிட்டார்.