நகைக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

துமகூரு : நவம்பர் . 9 – பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மூன்று திருடர்கள் வீட்டில் இருந்த பெண்ணை தாக்கியிருப்பதுடன் பீரோவில் இருந்த சுமார் 17 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கங்களை அபகரித்து தப்பியோடியுள்ள சம்பவம் நகரின் ஹோசபடாவனே போலீஸ் சரகத்தில் இன்று மதியம் நடந்துள்ளது. நகரின் ஷங்கர்புரத்தில் உள்ள ஜெ ஜெ நகைக்கடிகாரர் வீட்டுக்குள் முற்பகல் பட்டப்பகலில் நுழைந்துள்ள மூன்று திருடர்கள் வீட்டில் தனியாக இருந்த வீட்டு உரிமையாளரான பெண் மீது தாக்குதல் நடத்தி மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவின் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் 17 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் , ரொக்கம் ஆகியவற்றை அபகரித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். நகரின் எம் ஜி வீதியில் உள்ள ஜி ஜி ஜெவலர்ஸ் உரிமையாளரான பரத் ஜெயின் என்பவரின் வீட்டில் இந்த திருட்டு நடந்துள்ளது. திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்த போது வீட்டின் எஜமானி மற்றும் வேலையாள் மட்டும் இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் வீட்டு எஜமானியை தாக்கிவிட்டு நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். திருடர்களின் தாக்குதலால் காயமடைந்துள்ள வீட்டு எஜமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் தகவல்களை தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசாரின் தீவிர விசாரணைகளுக்கு பின்னரே இந்த விவகாரத்தின் முழு உண்மைகள் தெரியவரும். ஆனால் சம்பவம் நடந்த போது இருந்த வீட்டு பணியாள் எந்த காயங்கள் மற்றும் மிரட்டல்கள் எதிர்கொள்ளாதிருப்பது சில சந்தேகங்களை கிளப்பியுள்ளது.