நக்சலைட் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் படுகாயம்

ராய்பூர், நவ. 7- சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நக்சல்கள் பாதிப்பு அதிகம் இருப்பதால் தான் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2ம் கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 20 தொகுதிகளில் கிட்டத்தட்ட 12 தொகுதிகளில் அதிகளவு நக்சல் பாதிப்பு இருக்கிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சுமார் 600 வாக்குச்சாவடி மையங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி சிஆர்பிஎஃப் வீரர் படுகாயம் அடைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த அசம்பாவித சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இந்த நக்சல்களால் 3 உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், நக்சலைட் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியிலேயே தாக்குதல் நடைபெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்த வீரர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.