நடிகர் கமல் ரஷீத்கான் மும்பையில் கைது

மும்பை, ஆக. 30- கடந்த 2020 ஆம் ஆண்டு தரக்குறைவான விமர்சனங்களுடன் சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பகிர்ந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான கமல் ஆர் கான் கைது செய்யப்பட்டார். அவர் மீது யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கனல் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ரஷீத் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் மும்பை விமான நிலையத்தில் அவரை மும்பை மலாட் போலீஸார் கைது செய்தனர். அவர் இன்று மும்பை போரிவல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனத் தெரிகிறது. என்ன சர்ச்சை? கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கமல் ரஷீத் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். அதில் “ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிடக் கூடாது. ஒயின் ஷாப்கள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன” என்று பதிவிட்டிருந்தார். அதேபோல் இர்ஃபான் கான் பற்றியும் அவர் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். ஏப்ரல் 29 ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் அரிய வகை புற்றுநோயால் உயிரிழந்தார். அடுத்த 24 மணி நேரத்தில் ஏப்ரல் 30ல் பிரபல மூத்த நடிகர் ரிஷி கபூர் மறைந்தார். பாலிவுட்டின் இரண்டு ஜாம்பவான்கள் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழக்க, இரு கலைஞர்களையும் அவர்களின் மறைவை ஒட்டி தரக்குறைவாக விமர்சித்ததாக யுவ சேனா அமைப்பினர் புகார் செய்துள்ளனர்.
அந்தப் புகாரின் அடிப்படையிலேயே கமல் ரஷீத் கான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.