நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

செப்.15-
பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறை மும்பைஅதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்.
தமிழில், “அருந்ததி, சந்திரமுகி” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சோனு சூட். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நடிகர் சோனு சூட்டின் உறவினர் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
கொரோனா முதல் அலையில் இருந்தே சோனு சூட் நாடு முழுவதும் மக்களுக்கு உதவி செய்து வந்தார். பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்த வெளிமாநில ஊழியர்கள் சொந்த ஊர் செல்ல உதவினார். வெளிநாடுகளில் தங்கி இருந்த நபர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதே போல் இரண்டாம் அலையின் போது ரெமிடிஸ்வர் மருந்து தொடங்கி ஆக்சிஜன் சிலிண்டர் வரை பல ஆயிரம் பேருக்கு வழங்கி உதவி செய்தார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மூலம் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. இதை அடுத்து டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கும் ஆம் ஆத்மி கட்சி மூலம் சோனு சூட் தூதுவராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.