நடிகர் பாலா நிதி உதவி

சென்னை: டிச.8-சின்னத்திரை நடிகர் பாலா, சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார். அந்த வகையில், 200 குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் பாலா வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2015 வெள்ளத்தின்போதே உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது காசு இல்லை. இப்போது என்னிடம் ரூ.2.25 லட்சம் இருந்தது. என்னுடைய சொந்த தேவை மற்றும் வீட்டு வாடகை கொடுப்பதற்காக ரூ.25 ஆயிரம் எடுத்துக் கொண்டு 2 லட்சத்தை மக்களுக்கு கொடுத்து விட்டேன்.
வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும் வாழவைத்தது. நம்மை பார்த்துக் கொள்வது சென்னைதான். அதனால் நம்மால் முடிந்ததைச் செய்து இந்த ஊரை பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. யாரிடமும் நன்கொடை எதுவும் பெறவில்லை. முழுக்க முழுக்க நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், சின்னத்திரை நடிகர் அமுதவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.