நடிகை உயிருக்கு அச்சுறுத்தல் – உணவு, தண்ணீரை பரிசோதிக்க மனு

கொல்கத்தா: ஆக.6- மேற்கு வங்கத்தில் ஆசிரியர், ஊழியர்கள் பணி நியமனத்தில் மிகப் பெரியளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மேற்குவங்கத்தில் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றிய பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதில் சுமார் ரூ.50 கோடி ரொக்கம், 5 கிலோ நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டன. ‘‘இந்தப் பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்தும் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமானவர்கள் கொண்டு வந்தது. என் வீட்டில் அவர்கள் பணம் வைத்தது கூட எனக்கு தெரியாது’’ என்று அமலாக்கத் துறையினரிடம் அர்பிதா முகர்ஜி வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் இருவரும், கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘பார்த்தா சட்டர்ஜி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறையில் வழங்கப்படும் உணவு, தண்ணீரை பரிசோதித்த பின்பு வழங்க உத்தரவிட வேண்டும். 4 கைதிகளுக்கு மேல் உள்ளஅறையில் அர்பிதா முகர்ஜியை தங்க வைக்க கூடாது. விசாரணைக்கு பார்த்தா சட்டர்ஜி போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. இருவரது காவலையும் மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
பார்த்தா சட்டர்ஜி வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘பார்த்தா சட்டர்ஜி வீட்டில் எதுவும் கைப்பற்றப் படாததால், அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை’’ என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்றம் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதாவின் காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், அர்பிதாவுக்கு வழங்கப்படும் உணவு குறித்து விரைவில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.