நடிகை ஹேமமாலினிக்கு ரூ.123 கோடி சொத்து

மதுரா, ஏப். 6- பிரபல பாலிவுட் நடிகையும், மக்களவை எம்.பி.யுமான ஹேமமாலினி உத்தர பிரேதச மாநிலம் மதுரா தொகுதியில் 2014, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றவர். தற்போது, ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் மூன்றாவது முறையாக பாஜக சார்பில் மதுரா தொகுதியில் களமிறங்குகிறார்.இந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஹேம மாலினி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.123 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், கடன் ரூ.1.4 கோடி அளவுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடிப்பை தனது தொழிலாகவும், வாடகை மற்றும் வட்டி ஆதாயங்களை வருமானத்தின் ஆதாரங்களாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், அவரது கணவரும், முன்னாள் எம்.பி.யுமான தர்மேந்திரா தியோலுக்கு ரூ.6.4 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும், அவரது சொத்து மதிப்பு ரூ.20 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அவருக்கு எதிராக எந்த கிரிமினல் வழக்கும் நிலுவையில் இல்லை. 2012-ல் உதய்பூரின் சர் பதம்பட் சிங்கானியா பல்கலைக்கழகத்தில் அவர் கவுரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ரொக்கமாக ஹேமமாலினியிடம் ரூ.13.5 லட்சம், அவரது கணவர் தர்மேந்திராவிடம் ரூ.43 லட்சமும் உள்ளது. ஹேம மாலினிக்கு சொந்தமாக மெர்சிடிஸ் பென்ஸ், அல்கஸார் மற்றும் மாருதி ஈகோ உட்பட ரூ.61 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. தர்மேந்திராவிடம் ரேஞ்ச் ரோவர், மஹிந்திரா பொலேரோ, மோட்டார் சைக்கிள் உள்ளது. இந்த முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் யமுனை நதியை சுத்தம் செய்ய கடினமாக உழைப்பேன் என்று தனது தொகுதி மக்களிடம் ஹேமமாலினி வாக்குறுதி அளித்துள்ளார்.