நடுவருடன் சண்டைக்கு சென்ற சுப்மன் கில்.. நடவடிக்கை பாயுமா?

ஜெய்ப்பூர், ஏப். 12- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் சண்டைக்கு சென்ற சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத ராஜஸ்தான் அணியை குஜராத் அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. அதேபோல் 5 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, 2 வெற்றியுடன் மோசமாக செயல்பட்டு வந்த குஜராத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. சொந்த மண்ணில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குஜராத் அணியை வெகுவாக பாதித்தது. தற்போது அந்த தோல்வியை மறக்க வைக்கும் வகையில் ராஜஸ்தான் மண்ணிலேயே ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சுப்மன் கில் அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 44 பந்துகளில் 72 ரன்களை சேர்த்தார். அதேபோல் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது 17வது ஓவரை வீச மோகித் சர்மா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தை மோகித் சர்மா கொஞ்சம் ஒய்டாக வீசினார். அதற்கு கள நடுவர் உடனடியாக ஒய்டு சிக்னல் கொடுக்க, கேப்டன் சுப்மன் கில் ஒய்டு-க்கு அப்பீல் செய்தார். அதனை ரிவ்யூ செய்த 3வது நடுவர், நீங்கள் ஒய்டு இல்லை என்று உங்களின் முடிவையே கூறலாம் என்று கூறிவிட்டு உடனடியாக, இது ஒய்டு தான். நீங்கள் உங்களின் முடிவையே தொடரலாம் என்று கூறினார். தவறுதலாக சில வார்த்தைகளை 3வது நடுவர் கூறியது வீரர்களுக்கும் சரியாக விளக்கப்பட்டது. ஆனால் கேப்டன் சுப்மன் கில் 3வது நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்து, கள நடுவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார். நடுவருடன் பேசியதால் விரக்தியடைந்த சுப்மன் கில், பந்தையும் தூக்கி எறிந்து ஆக்ரோஷமாக காணப்பட்டார். விதிகளின் படி, நடுவர்களின் முடிவை ஏற்க மறுக்கும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுப்மன் கில்லுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. கேப்டனான பின் சுப்மன் கில் நடுவர்களுடன் தொடர்ந்து விவாதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.