
புதுடெல்லி, ஆகஸ்ட் 7- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளதால் மீண்டும் எம்.பி. ஆகியுள்ள ராகுல் காந்தி நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தி நிச்சயம் பேசுவார் என்றார்.
மணிப்பூர் வன்முறை விவகாரம் குறித்து மக்களவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ஆதரவுடன் காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சன் கோகாய் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10-ம் தேதி பதில் அளிப்பார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்கியுள்ள நடவடிக்கையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வரவேற்று ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருவதால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்
பீகார் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.