நலத் திட்டங்களை பெற உ.பி.யில் குடும்ப அட்டை: முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு

புதுடெல்லி, ஜூன் 21- உத்தர பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை சுலபமாக பெற ஏதுவாக, குடும்ப அடையாள அட்டை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும், குடும்ப அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகவரி, வருமானம், சாதி உள்ளிட்ட பல முக்கிய விவரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.இதன்மூலம் அக்குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே அடையாள அட்டை போதுமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதைப் பெற அக்குடும்பத்தாரின் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டு உள்ளது. இந்த குடும்ப அடையாள அட்டை எண் வழியாக அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் 76 வகையான நலத் திட்டங்களும் கிடைக்க வசதிசெய்யப்பட உள்ளது. இந்த குடும்பஅடையாள அட்டையால் மக்கள் தொகை பற்றிய விவரமும் சேகரிக்கப்பட உள்ளது.