நலமாக உள்ளேன் கவலை வேண்டாம்: தேவகவுடா

பெங்களூர் : செப்டம்பர் . 22 – என்னுடைய உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் என முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவேகௌடா தெரிவித்துள்ளார். சிறிதளவு உடல் நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் மருத்துவர்கள் சற்று ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். அந்த காரணத்தால் சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கவேண்டியதாயிற்று . இன்னும் சில நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். வீட்டிலிருந்தபடியே என்னுடைய அனைத்து அரசியல் , பாராளுமன்ற மற்றும் கட்சி பொறுப்புகளை நிர்வகித்து வருகிறேன். இந்த நிலையில் கட்சி தொண்டர்கள் மற்றும் பிரமுகர்கள் சில நாட்களுக்கு என்னை சந்திக்க வருவது வேண்டாம் எனவும் முன்னாள் பிரதமர் தேவேகௌடா கேட்டுக்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் நானே நேரில் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் செய்வதுடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கு கொள்வேன். எந்த காரணம் கொண்டும் பிரமுகர்கள் , தொண்டர்கள் தவறாக கருத வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். தவிர என் வீட்டுக்கு வந்து என் உடல் நிலை குறித்து விசாரித்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா , முதல்வர் பசவராஜ் பொம்மை , முன்னாள் முதல்வர் எடியூரப்பா , வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் உட்பட இதர அனைத்து அமைச்சர்கள் , பிரமுகர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் தேவேகௌடா தெரிவித்துள்ளார்.