
திருவனந்தபுரம்: ஆக. 7-
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காரஜ்மாவில் கிண்னெடும் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் (வயது 35). இவர் மாவேலிக்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இன்டர்நெட் கபே (கணினி மையம்) நடத்தி வந்தார். திருமணமாகாத இவர், தற்போது புளிமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் தனது காரில் இண்டர்நெட் கபேக்கு சென்று வந்தார். நேற்று தனது நிறுவனத்திற்கு சென்ற அவர் நள்ளிரவு வரை அங்கேயே இருந்து வேலை பார்த்துள்ளார். அதன்பிறகு காரில் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டின் முன்பு காரை நிறுத்தினார். அப்போது திடீரென கார் தீப்பிடித்தது.
இதனால் காருக்குள் இருந்த கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் உடனடியாக இறங்க முயன்றார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அதற்குள் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. கண்ணன் தீயில் கருகியபடி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கண்ணன் என்ற கிருஷ்ண பிரகாஷ் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் தீப்பிடித்தது எப்படி என்பது தெரியவில்லை.
தீவிபத்தின் போது, காரில் இருந்து பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். எனவே காரில் வெடிபொருட்கள் ஏதும் இருந்ததா? அல்லது தொழில் நுட்ப கோளாறு காரணமாக கார் தீப்பிடித்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்