நள்ளிரவில் பேருந்துகள் நிறுத்தம்: முண்டியடிக்கும் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்

தருமபுரி,அக்.18-
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இரவு 11 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை போதிய அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால், செல்ல முடியாமல் பேருந்துக்காக பயணிகள் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையங்களில் காத்துக் கிடக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய வழித்தடங்களில் இருந்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் வரும் பேருந்து பயணிகள், தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கும், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரிக்கு செல்லும் வகையில் அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாத காரணத்தால் இருபேருந்து நிலையங்களிலும் விடிய,விடிய காத்துக்கிடக்கின்றனர். இயக்கப்படும் ஒரிரு பேருந்துகள் மூலம் பயணிகள் அதிகளவில் கூட்ட நெரிசலில் சிக்கி பேருந்துகளில் ஏறமுடியாமல் காயம் ஏற்படும் அவலநிலைக்கு தள்ளப்படுவதுடன், சமூக இடைவெளி இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தைகளுடன் பெண்கள், முதியோர்கள் என குடும்பம், குடும்பமாக வரும் பயணிகள் நெரிசலில் சிக்கி செல்ல முடியாத நிலையில் தவித்து வருவதுடன், அவர்களுக்கு வேகமாக கொரோனா தொற்று பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு மேல் விடியற்காலை 4 மணி வரையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இடையில் கூடுதல் பேருந்து இயக்ககோரி பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் பலமுறை சம்மந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட இரு மாவட்ட நிர்வாகங்களும், உரிய கவனம் செலுத்தி, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நலன்கருதி, நள்ளிரவு நேர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வாறு பேருந்துக்காக 5 முதல் 6மணி நேரம் காத்து கிடக்கும் பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்து பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா இரு மாவட்ட நிர்வாகங்கள்.