நவாஸ் ஷெரீப்பின் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை

லாகூர், ஜன. 7- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவரது மகள் மரியம் நவாஸ். அந்நாட்டின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் என்ற கட்சியின் மூத்த துணை தலைவராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு மரியம் நவாஸ் மற்றும் அவரது தந்தை நவாஸ் ஷெரீப் சென்றனர். இந்நிலையில், மரியம் நவாசுக்கு ஜெனீவா நகரில் உள்ள மருத்துவமனையில் தொண்டை அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவருக்கு தொண்டை பகுதியில் இரண்டு சுரப்பிகளில் இந்த சிகிச்சை செய்த பின்னர், அவர் ஓய்வறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதேபோன்று நவாஸ் ஷெரீப்பும் ஜெனீவாவில் இதய அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்க இருக்கிறார் என ஜியோ நியூஸ் தெரிவிக்கின்றது. அவர்கள் இருவரும் ஜெனீவாவில் நடைபெறும் கூட்டங்களிலும் பங்கேற்க இருக்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் வருகிற 9-ந்தேதி (நாளை மறுநாள்) ஜெனீவாவில் பருவகால மாற்றம் தொடர்புடைய சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.