நவீன சிசிடிவி கேமராக்கள்

மும்பை, செப் 28- மும்பையில் உள்ள ரெயில் நிலையங்களில் முக அடையாளம் காணும் அமைப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முக அடையாள கேமரா மத்திய ரெயில்வே 364 ரெயில் நிலையங்களில் முகத்தை அடையாளம் காணும் அமைப்புடன் கூடிய 3 ஆயிரத்து 652 கேமராக்களை நிறுவ உள்ளது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்ட குளோஸ்டு சர்க்யூட் டி.வி.களும் நிறுவப்படுகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரெயில்வே வாரியம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி மும்பை புறநகர் பகுதியில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள் உள்பட மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் முக அடையாளம் காணும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இது தேடப்படும் குற்றவாளிகளை அடையாளம் காணவும், கூட்டமான பகுதிகளில் கண்காணிப்பு பணியை எளிமையாக்கவும் உதவும். விழித்திரை அடையாளம் இதுகுறித்து ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்த முக அடையாளம் காணும் அமைப்பு கொண்ட கேமராக்கள் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றங்களை கட்டுப்படுத்தவும், சட்டத்தை மீறுபவர்களை தடுக்கவும் மற்றும் ரெயில்வே விதிமுறைகளை பயணிகள் கடைப்பிடிப்பதை கண்காணிக்கவும் உதவும். இந்த கேமராக்கள் விரிவான கண்காணிப்பு பணியில் மற்றுமொரு மைல்கல்லாகும். இந்த கேமராக்களில் உள்ள தரவுகள் மூலமாக ஒரு நபரின் முக அடையாளத்தை கண்டுபிடிக்க முடியும். எனவே ரெயில் நிலையத்திற்குள் நுழையும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக நிர்வாகத்தை எச்சரிக்கும். விழித்திரை அல்லது நெற்றி போன்ற முகத்தின் பல்வேறு பகுதிகளை அடையாளம் காண இதனால் முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், தாதர், குர்லா, தானே, லோக்மான்ய திலக் டெர்மினஸ் மற்றும் கல்யாண் போன்ற சில ரெயில் நிலையங்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்புகளை கொண்டுள்ளதால் அவை இந்த திட்டத்தில் சேர்க்கப்படாது.