நவீன போர் விமானங்கள் அதிகம் தேவை: தளபதி வி.ஆர் சவுத்ரி

ஜோத்பூர்,நவ. 9- இந்திய விமானப்படையில் 4.5 தலைமுறை நவீன போர் விமானங்களை அதிகளவில் சேர்ப்பது மிக முக்கியம் என விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.
இந்தியா, பிரான்ஸ் விமானப் படைகள் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ‘கருடா-7’ என்ற பெயரில் கடந்த மாதம் 26-ம் தேதி இருதரப்பு கூட்டுப் பயிற்சியை தொடங்கின. இது வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல், தேஜஸ், ஜாகுவார் மற்றும் சுகோய் ரக போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.
இதற்கிடையே பிரான்ஸ் விமானப்படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் மிலே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் டெல்லியில், இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரியை நேற்று சந்திந்து இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தோ-பசிபிக் நிலவரம் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர். இருவரும் ஜோத்பூரில் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் நேற்று கலந்து கொண்டனர்.
அப்போது பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவன தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தில் விமானப்படை தளபதி சவுத்ரியும், ரஷ்ய தயாரிப்பு சுகோய் போர்விமானத்தில் பிரான்ஸ் விமானப்படை தளபதி ஸ்டீபன் மிலேவும் பறந்தனர்.