நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர விபத்து9 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

நாக்பூர் டிச. 18:
புறநகர் பகுதியில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உடல் சிதறி பலியாகினர். மகாராஷ்டிராவின் நாக்பூர் புறநகர் பகுதியான பசார்காவ் பகுதியில் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. நேற்று காலை 9 மணிக்கு அந்த தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், நாக்பூர் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்பி ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், 9 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானது தெரியவந்தது. மேலும், படுகாயம் அடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாக்பூர் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்பி ஹர்ஷ் போத்தார் ஆகியோர் தொழிற்சாலையில் ஆய்வு பணி மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. நிலக்கரி சுரங்கத்துக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் தயாரிக்கப்படுவதாக தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.