நாசிக்கில் ரசாயன ஆலையில் பயங்கர தீ

மும்பை, ஜன. 2- நாசிக்கில் ரசாயன ஆலையில் நடந்த பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். நாசிக் மாவட்டம் இகத்பூரி, முந்தேகாவ் பகுதியில் மும்பை – ஆக்ரா நெடுஞ்சாலையில் ஜின்டால் பாலி பிலிம்ஸ் என்ற தனியார் ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுமார் 25 பேர் பணியாற்றி வருகின்றனர். நேற்று புத்தாண்டு என்பதால் குறைவான தொழிலாளர்கள் மட்டும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. காலை 11.30 மணியளவில் திடீரென ஆலையில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. வெடி சத்தம் அருகில் உள்ள சுமார் 25 கிராமங்களுக்கும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தீ விபத்தால் கரும்புகை வெளியேறி அந்த பகுதியே புகை மண்டலமானது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் ஆலையில் எரிந்த பயங்கர தீயை அணைக்கும் பணியிலும், மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். இருப்பினும் தீ விபத்தில் சிக்கிய பெண் உள்பட 2 தொழிலாளிகள் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட 16 தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “விபத்து நடந்த ஆலை தானியங்கி எந்திரங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. எனவே அங்கு அதிகளவில் தொழிலாளர்கள் இல்லை. மீட்பு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்” என்றார்.