நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் தீர்மானம்: மோடி உரையாற்ற வாய்ப்பு

புதுடெல்லி: பிப்.10-
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நளான இன்று (பிப்.10), ராமர் கோயில் குறித்த தீர்மானம் நிறைவேற்ற பாஜக திட்டமிட்டிருப்பதாகவும், விவாதத்தின் இறுதியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு 17வது மக்களவை இன்றுடன் நிறைவடைய உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ராமர் கோயில் குறித்த தீர்மானத்தை கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, பாஜகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக பிரிவு 193-ன் கீழ் தீர்மானம் கொண்டு வர பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவார் என்றும் கூறப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னின்று நடத்தினர். இதில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.