நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியா?; பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: செப். 13:
ஒக்கலிக சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமி போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பெரும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜனதா 66 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 19 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன.வரலாற்றில் முதல்முறையாக 19 தொகுதிகளில் மட்டுமே ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றது அக்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் தான் என ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் கருதுகிறார்கள். . இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி, காங்கிரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும், இழுந்துபோன தனது சமுதாய வாக்குகளை பெறவும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க தயாராகிவருகிறார். ஏற்கனவே சட்டசபை கூட்டத்தின் போது அரசுக்கு எதிராக பா.ஜனதாவுடன், ஜனதாதளம் (எஸ்) கைகோர்த்து போராட்டம் நடத்தியது.அதுபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து சுயேச்சை போட்டியிட்ட நடிகை சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றிருந்தார். மண்டியா மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 5 இடங்களில் காங்கிரசும், கே.ஆர்.பேட்டையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியும், மேல்கோட்டையில் காங்கிரஸ் ஆதரவு சுயேச்சையாக போட்டியிட்ட தர்ஷன் புட்டண்ணய்யாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை வீழ்த்தவும், ஒக்கலிக சமுதாய வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் குமாரசாமி போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அவர் மண்டியா அல்லது பெங்களூரு புறநகர் தொகுதியில் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/India/parliment-election-news-1051443