நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, நவ.11
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும், 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. காணொலி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் 12 ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், திமுக தலைமை வலியுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் கூறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.