நாடாளுமன்ற பாதுகாப்பில் சிஐஎஸ்எப்

புதுடெல்லி, மே 22 நாடாளுமன்றத்தை பாதுகாப்பதற் கான முழுப் பொறுப்பும் மத்தியதொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நேற்று முன்தினம் முதல் (மே 20) அமலுக்கு வந்தது. இதையடுத்து இதுவரை பாதுகாப்பை வழங்கிவந்த மத்திய ரிசர்வ் போலீஸ்படை (சிஆர்பிஎப்) நாடாளுமன்றத் திலிருந்து வெளியேறியுள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் 22-ம் ஆண்டு தினமான 2023 டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின்போது மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து திடீரென குதித்த இரண்டு பேர் குப்பிகளில் இருந்து மஞ்சள் புகையை வெளி யிட்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாக அமைந்தது.இதைத் தொடர்ந்து இந்திய நாடாளுமன்ற வளாகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பிரச்சினைகளை ஆராய்ந்து, தகுந்த பரிந்துரைகளை வழங்க சிஆர்பிஎப் டிஜி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு வழங்கிய பரிந்துரையின் பேரில் தற்போது நாடாளுமன்ற வளாகத்தின் முழுமையான பாதுகாப்பு பொறுப்பையும் 3,317 வீரர்கள் அடங்கிய சிஐஎஸ்எப் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு நடைமுறை மே 20-ம் தேதி காலை 6 மணியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த சிஆர்பிஎப் வீரர்கள் தங்களது அனைத்து பொறுப்புகளையும் சிஐஎஸ்எப் இடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.
சிஐஎஸ்எப் வீரர்கள் முழுமையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.