நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

பெங்களூர்: ஜூன் . 11 – நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் தேசிய தலைவி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு மத்திய அரசு தேவையில்லாத தொல்லைகள் அளித்து வருகிறது என்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நகரில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில் ஜூன் 13 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்களுக்கு எதிரில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம். இந்த விஷயமாக நகரின் ஷாந்திநகர் டபுள் ரோட் அருகிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகம் எதிரில் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டெல்லியில் பங்குகொள்ள உள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி நடக்க இருப்பதுடன் ராகுல் காந்தியை எத்தனை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்துவார்களோ அத்தனை மணி நேரத்திற்கு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் மாநிலத்தின் அனைத்து எம் எல் ஏக்கள் , பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.